சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி சமூகவியல் துறையும், பசுமைத் தாயகமும் இணைந்து நடத்திய, காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் பாலின சமத்துவம் (CLIMATE JUSTICE & GENDER EQUALITY) குறித்த கருத்தரங்கு 07.02.2024 அன்று நடைபெற்றது மாணவிகள் மத்தியில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பேசியதாவது:
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாலைவனம் இல்லாத சீனாவின் தலைநகர் பீஜங்கில் புழுதி புயல்கள் உருவாகின்றது இதனால் அங்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் திடீரென்று ஒரே இடத்தில் பல சென்டிமீட்டர் மழை பெய்கிறது அதுதான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவலாஞ்சி, தூத்துக்குடியின் காயல்பட்டினம் போன்ற இடங்களில் ஏற்பட்டது.
கல்லூரி மாணவியாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்களுடைய விழிப்புணர்வு அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தி சட்டங்களை உருவாக்க வழி வகுக்கும்.
ஆண்டுதோறும் சென்னையில் மழையால் மக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகிறது வீட்டை விட்டு பல நாள் வெளியில் சென்று தங்க வேண்டிய நிலை உருவாகிறது. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஏற்படும் மழை வெள்ளத்தால் உடமைகளை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இவற்றிற்கெல்லாம் காலநிலை மாறுபாடு முக்கிய காரணம்.
இன்னும் 40, 50 ஆண்டுகளில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அருகே கடல் வந்துவிடும் அந்த அளவிற்கு வேகமாக காலநிலை மாற்றம் நடைபெற்று வருகிறது.
பசுமைத்தாயகம் மூலமாக 28 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம் ஆனால் இன்னும் எந்த மாற்றமும் வரவில்லை தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறோம்.
ஸ்பெயின் ஜெர்மனி உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பல விதமான இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட தொடங்கியுள்ளது.
இனி கடுமையான வறட்சி கடுமையான வெள்ளம் கடுமையான புயல் என அடிக்கடி கேட்கும் மோசமான கால நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.
இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பு :
காலநிலை மாற்றத்தால் விவசாயம் பதிக்கப்பட்டுள்ளது அதனால் அரிசி விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 3500 பேருந்துகள் இருக்கும் நிலையில் அதை 8000 பேருந்துகளாக உயர்த்த வேண்டும்.
பெண்களுக்கு இலவச பேருந்து வழங்கப்படுவது போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவச பேருந்துகள் கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியாக வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிவு படுத்த வேண்டும் அப்போதுதான் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள்.
மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு நான்காயிரம் பேர் இறக்கும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.






