அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு நியாயங்கள்…

0
253

அருந்ததியினருக்கு 2009-ல் தி.மு.க ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்று 7 பேர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திரா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் உள்ஒதுக்கீட்டிற்கும் இந்த தீர்ப்பு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

நீதிபதிகளின் உள்ளடி வேலை

இந்த 7 நீதிபதிகள் அடங்கிய இந்த பெஞ்சில் ஒரு நீதிபதி மட்டுமே மாற்றுக் கருத்தினை வைத்துள்ளார். அதோடு இந்த நீதிபதிகளில் 4 பேர் கிரிமிலேயரை அமல்படுத்த பரிந்துரைத்துள்ளார்கள். அதில் குறிப்பாக இந்த இடஒதுக்கீட்டு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் பல பரிந்துரைகளை நீதிபதிகள் வழங்கியிருக்கிறார்கள்.

(இந்த இடஓதுக்கீட்டை நமக்கு அறிமுகப்படுத்தியதே ஆங்கிலேயர்கள்தான். நம்மை அடிமைப்படுத்த வந்த அந்தியர்களுக்கே நம் மீது இரக்கம் வரும் அளவிற்கு இங்கே சாதி ரீதியாக அடக்குமுறைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை இருந்திருக்கிறது.)

இடஒதுக்கீட்டை முறையாக மற்றும் முழுமையாக அமல்படுத்தாத இந்த சூழலில் அதுவும் 1000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமை தேசத்தில் 100 ஆண்டு இடஒதுக்கீடு மிகப்பெரியமாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. இந்த விஷயம் மெத்த படித்த ஆதிக்கச் சாதிகளுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் எல்லோரையும் சமூக, பொருளாதார அடிப்படையில் சமமாக பார்க்கும் பார்வை அவர்களுக்கு வரவில்லை என்பதைதான் இது காட்டுகிறது. சட்டங்களுக்கு பயந்து தீண்டாமையின் முந்தைய படிக்கட்டுகளில் நின்றுக்கொண்டு பம்மாத்துக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அளவிற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.க. அமைப்புடைய சிந்தாந்தம் இந்த இந்திய மண்ணில் பரவலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதிகாரம் அத்தகைய வாய்ப்புகளை நிலைநிறுத்துகிறது. அதற்காகத்தான் அதிகாரத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள படாதபாடு படுகிறார்கள். இந்த காலகட்டத்தில் இப்படி என்றால் அவர்கள் மன்னராட்சி காலத்தில் எவ்வளவு செல்வாக்கை செலுத்தியிருப்பார்கள் என்பதை நினைத்தாலே நாம அப்போது பிறக்கவில்லையே என்று நிம்மதி பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.

இந்த கிரிலேயரை தமிழ்நாட்டில் யாரும் ஏற்கமாட்டார்கள். ஆனால் இந்தியாவில் பிற மாநிலங்களில் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி அதனை அமல்படுத்தும் சூழலை ஏற்படுத்துவார்கள். அதற்கடுத்த நிலையாக இந்த இடஒதுக்கீட்டை ஆய்வு செய்வதாக கூறி இதனை முற்றிலும் நிராகரிக்கவும் பா.ஜ.க. துணியும்.
இந்த தீர்ப்பு மூலம் பா.ஜ.க.விற்கு ஒரு கண் போனாலும் தலித் ஒற்றுமையில் பிளவு ஏறபடுத்தலாம் என்கிற ரீதியில் அவர்கள் உள்ளார்ந்து சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இடஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதை உறுதிபடுத்துவதோடு உள்ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்குகியிருக்கும் இந்த சூழலில் இந்த இரண்டையும் ஒட்டுமொத்த விடுதலை கட்சியும் எதிர்க்கிறது. அதோடு கிருஷ்ணசாமி, செ.கு.தமிழரசன் உள்ளிட்ட பல்வேறு பரையர், பள்ளர் இயக்கத் தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.

கிருஷ்ணசாமி எதிர்ப்பு என்பது சங்கித்தனம் என்று பலரும் பார்த்தாலும் அவரோடு சேர்ந்து பல பறையர் சமூக இயக்கங்களும் கடுமையாக எதிர்த்து திருமாவளவனை பறையர் சமூக மக்களோடு அந்நியப்படுத்தும் போக்கை முழுவீச்சில் முன்னெடுக்கிறார்கள். அதற்கு பயந்துதான் திருமாவளவன் இந்த உள்ஒதுக்கீட்டை எதிர்க்கிறார். அதோடு தன்னோடு இயங்கும் ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் போன்ற போன்ற பலருடைய அரசியல் சார்ந்த வழிகாட்டுதலையும் அவர் மதிக்க வேண்டிய ஒரு நெருக்கடியில் இருக்கிறார்.

பக்குவப்பட்டு முதிர்ந்த சூழலில் கடந்த சில காலமாக திருமாவளவனுக்கு ஏற்பட்டு வரும் இதுபோன்ற நெருக்கடிகள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் ஆபத்தானது என்பது மட்டும் நமக்கு புரிகிறது.

புள்ளி விவரங்கள் சொல்வது என்ன

2008 அன்று ஒட்டுமொத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் 38 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 1கூட அருந்ததியினர் இல்லை. அதேபோல ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் 1% மட்டுமே அருந்ததியினர். மருத்துவத்துறையில் .75% பங்கேற்றிருக்கிறார். அதாவது 1% கூட அருந்ததியினர் மக்கள் பங்கேற்றவில்லை. அதேபோல அரசுத் துறையில் டிஆஓ என்கிற ஏ குரூப்பில் .5%, ஆர்.டிடி.ஓ. மற்றும் தாசில்தார் என்கிற பி குரூப்பில் .65% கிளார்க் மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் என்கிற சி குரூப்பில் .75% துப்புரவு பணியாளர், ஆபீஸ் அசிஸ்டெண்ட், வாட்மேன் என்கிற டி குரூப்பில் 5% அருந்ததியினர் பணியில் இருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட ஏ,பி,சி போன்ற முதல் மூன்று பிரிவுகளில் 1% வாய்ப்பை பெற பறையர் மற்றும் பள்ளர்கள் சமூக மக்களோடு போட்டி போட முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். இவர்கள் பல கிராமப்புறங்களில் பள்ளர் மற்றும் பறையர் சமூக மக்களோடு இணைந்து வாழ்ந்து வந்தாலும் பள்ளிக்கூடம் போக முடியாத அளவிற்கு பள்ளர் மற்றும் பறையர் சமூக மக்களாலும் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திலே இந்த சூழல் நிலவியது என்றால் கல்லூரி மற்றும் உயர் கல்வியை தொடர எவ்வளவு சிரமங்கள் இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
அதனை ஜனார்த்தனம் கமிட்டி குறிப்பிட்டிருக்கிறார்கள். இதுபோன்ற பல்வேறு காரணங்களை ஆய்வு செய்த பிறகுதான் உச்சநீதிமன்றம் உள்ஒதுக்கீட்டை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.

மக்கள் தொகை கணக்கீடு
1.5 கோடி பேர் தலித்துகள் என்றால் பறையர் 91 லட்சம், பள்ளர் 24 லட்சம் பேர், அருந்ததியினர் பகுப்பில் அருந்ததியர் – 771659, சக்கிலியன் – 771139, மாதிகா – 5103, மாதாரி – 249494, பகடை – 13795, செம்மான் – 1941 என 2011ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கிருஷ்ணசாமியின் சதிகள்
பறையர் 91 லட்சம், பள்ளர் 24 லட்சம் அருந்ததியினர் 21 லட்சம் (பறையர் ஆதிதிராவிடர் 12%. பள்ளர் 3,4%, அருந்ததியினர் 2.9) என்ற உண்மைகளை மறைத்து கிருஷ்ணசாமி பள்ளர்கள் 1 கோடி பேர் என்று தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்.
இடஒதுக்கீட்டில் நாங்கள் முன்னேற வில்லை என்றும் தகுதி அடிப்படையில்தான் தாங்கள் முன்னேறி வந்தோம் என்றும் எங்களுக்கு இடஒதுக்கீடே தேவையில்லை என்றும் கடந்த 10 ஆண்டுகாலமாக சொல்லி வந்த கிருஷ்ணசாமி தற்போது இடஒதுக்கீட்டால் பாதிப்படைகிறோம் என்று சொல்லி நிலீக்கண்ணீர் வடிக்கிறார்.

வெறும் 3,4% மக்கள் தொகை கொண்ட தனது சமூகத்திற்கு 6% ஒதுக்கீட்டை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பறையர் சமூக மக்களின் இடஒதுக்கீட்டு வாய்ப்பையும் பறிக்க நினைக்கிறார். அதோடு எஸ்.டி. பட்டியல் எங்களுக்கு இழுக்கு என்று சொல்லி எங்களை பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முழுங்கி வரும் கிருஷ்ணசாமி வெளியேறும் சூழலில் இப்படி கலாட்டா செய்வதற்கு பின்னால் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க முற்படும் சதியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.