கருவறையும் பூசை உரிமையும் கலைகளும் பிராமணர்களின் சொத்தா….

0
1590

சாதியின் பெயரால் பலரையும் கோயில் நுழைவதை தடுத்து பின்பு பூசக உரிமையை வழங்காமல் இருந்து வருகிறார்கள் இந்த ஆரியர்கள். இன்றைக்கு கருவறைக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எப்படி சொல்ல முடிகிறது என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

நடனம், இசை, பாட்டு போன்ற கலைகளை கடவுள் சொத்தாக்கி அதுவும் தங்களுக்கே உரியது என்று விதந்தோதும் போக்கும் இன்றைக்கு தொடர்கிறது.
இன்றைக்கு சுதா ரகுநாதன் சொல்கிறார். எப்படி கருவறைக்குள் நுழைய முடியாதே அதுபோல பாடுவதையும், இசை வாத்தியங்கள் இசைக்கு உரிமையை பிறருக்கு விட்டுத்தர முடியாது என்கிறார்.

இசை, நடனம், பாடல் உரிமை பிராமணருக்கு மட்டுமா?

பொதுவாக இவர்கள் கதைகளை வேதக்குறிப்புகளிலிருந்தே எடுத்துக்காட்டுவார்கள். இந்த வேதங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தமிழ் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்து தமிழ் தொன்மையை விழுங்குவதற்காக திட்டமிட்டு காலந்தோறும் பல்வேறு முறை திருத்தம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன என்பதை அம்பேத்கார் பல்வேறு ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்.

இப்படியாகத்தான் அகத்தியரின் சீடர் தொல்காப்பியர் என்றும் இராவணன், ராமர் கதைகளின் வழியே நம் நம்பிக்கையின் வழியே அவர்கள் கதைகளை புனைந்து நம்மையும் ஏற்கச் செய்கிறார்கள்.

பரதர் எழுதிய நூலில் விளக்கப்பட்ட கூத்து பரதநாட்டிய மாயிற்று. இந்த பரதர் கி.பி.4 ம் நூற்றாண்டும் என்றும் கி.மு. 3ம் நூற்றாண்டு என்று இரு வேறு கருத்துகள் உள்ளன.
சரி அவர்களின் கூற்றுப்படி பின்னோக்கிய காலத்தை எடுத்துக்கொள்வோம். அதன்படி பார்த்தாலும் சிலப்பதிகாரத்திற்கு பிற்பட்டே ‘பரத நாட்டிய சாத்திரம்’ மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பரதம் என்கிற மூலத் தமிழ் நாட்டிய நூல் அழிந்துவிட்டது. ஆனால் அதன் வழிநூலான வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்ட ‘பரத நாட்டிய சாத்திரம்’ இன்றும் இருக்கிறது. இந்த வடமொழி நூலுக்கு அபிநவகுப்தர் எனும் காசுமீர்க்காரர் உரை எழுதியுள்ளார்.

நாட்டியக் கலை வல்லுநர்களான கூத்தர், விறலியர் என்போர் இசைக் கருவி வல்லுநர்களோடு கூட்டம் கூட்ட மாகச் சென்று நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சமயக் குரவர்கள் நால்வர் வீதிவிதியாக சென்று கோயில்களில் பாடல்களை இசையோடு பாடினார்கள் என்ற குறிப்பும் உள்ளது.

தமிழ் சாகித்தியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வடமொழி இசை இலக்கண நூல்கள் உருவாகின. இசை இலக்கியம் இன்றி இசை இலக்கணம் இல்லை. இசை இலக்கியங்கள் அதாவது சாகித்தியங்கள் எல்லாம் தமிழில்தான் இருந்தன. அதனைச் சொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை. தங்களின் இசை இலக்கண நூல்களிலும் தமிழ் சாகித்தியங்களைக் கூறுவதையோ, தமிழ் இசை இலக்கண நூல்களைக் கூறுவதையோ திட்டமிட்டு மறைத்தார்கள். வடமொழிதான் அனைத்துக்கும் மூலம் என்ற கருத்தை நிலை நிறுத்திட விரும்பினார்கள். ஆதலால் தமிழ் சாகித்தியங்களையோ, தமிழ் இசை இலக்கண நூல்களையோ சொல்ல விரும்பவில்லை. மதங்க முனிவருடைய இலட்சணக்கிரந்த நூலாகிய பிருகத்தேசி முதல் பிற சிறப்பான வடமொழி இலக்கணநூல்கள் எல்லாம் கி.பி. 8ஆம் 9ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்டவையே ஆகும்-. (மு. அருணாசலம் அவர்களின் தமிழ் இசை இலக்கண வரலாறு எனும் நூல்)

ஆக கலைகள் மனித குலத்திற்கு பொதுவானது. பயிற்சி, தேர்ச்சி தான் முக்கியமே தவிர அது குறிப்பிட்ட சாதியருக்கு சொந்தமானதாக சுருக்குவது அபத்தமானது.

இந்த மண்ணுக்கும் பண்பாட்டிற்கும் தொடர்பற்ற ஆரிய பிராமணர்களை நம் மன்னர்கள் ஆதரவளித்து நிலம், பொன், பொருள் உள்ளிட்டவற்றை ஈகை வழங்குவதை விருந்தோம்பல் பண்பாக கருதினர்.

சிலர் மூட நம்பிக்கைகளை ஏற்று அவர்களைப் போற்றினர்.

பல்லவர் ஆட்சி தொடங்கி தமிழ் மூவேந்தர்கள், நாயக்க மன்னர்கள் ஆட்சி வரை அமைச்சு பணிகளையும் நிர்வாக மற்றும் நீதி வழங்கும் பொறுப்பிலும் இடம் அளித்து அழகு பார்த்தனர்.

இப்படியாக செல்வாக்கு பெற்றிருந்ததால் தமிழர்களின் அனைத்து தொன்மைகளையும் தனதுடையாக்கிக்கொள்ளும் போக்கும் என்பது அவர்கள் தங்களை மனிதராக நினைக்காமல் இன்னும் கடவுளுக்கு இணையாக நினைப்பதைத் தான் இந்த நவீன காலத்தில் வேடிக்கையாக இருக்கிறது.

இவர்களுக்கு அரசியல்வாதிகளும் மற்றும் நீதித்துறையும் துணை போவது மூடத்தனமானது.

கருவறை எப்படி பிராமணர்களுக்கு சொந்தமானது…

சிவன் வழிபாடு கோயில் கட்டுமானங்களும்
சிவவிங்க வழிபாடு அக்காலத்தில் ஏற்பட்டு முதலில் ஆரியர்களால் இகழப்பட்டுப் பின் தழுவப்பட்டதாகும். இருக்கு வேதத்தில் அதன் இகழ்ச்சியும், அதர்வண வேதத்தில் அதன் புகழ்ச்சியும் காணப்படும். கோயிலிலுள்ள வடிவங்கள் அக்காலத்தில் மதிப்பாகக் கல்லிலும் மரத்திலும் அமைக்கப்பட்டன. பிராணிகளின் பலியும் அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது.
கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பு ஹரப்£, மோகஞ்சதாரா போன்ற இடங்களின் கண்டெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கோயில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குதிரையை தவிரித்து பல்வேறு விலங்குகளும் இடம் பெற்றுள்ளன.

ஆக இன்றைக்கு ஆரியர்களின் பல்வேறு வழக்க வழக்கம் இங்கேயிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்கள் கோட்டைகளும் கொத்தளங்களும் கட்டிப் பெரிய வீடுகளில் வாழ்ந்தனர். இருக்கு வேதத்தில் தாசி யூக்கள் பெரிய அரண்மனைகளில் வசித்தனரெனவும், அவர்கள் அரண்மனைகளுக்கு நூறு வாசல்கள் இருந்தன. வென்றும் பேசப்படுகிறது. எழு நிலை மாடங்கள் என்பனவே பிற்காலத்துக் கோபுரங்களாயின. ஆயிரக்கால் மண்டபங்கள் அக்காலத்தில் இருந்தபடியே இக் காலத்திலும் காணப் படுகின்றன. தென்னாட்டில் உள்ள பெரிய கோவில்கள் போலப் பெருங் கட்டடங்கள் வட நாட்டிற் காண்டல் அரிது. சிந்து நாகரிகத்தின் காலத்திலேயே கோயில்கள் இருந்தமையால் புத்தர் காலத்திற்குப் பின் தான் கோயில்கள் ஏற்பட்டன வென்பது தவறு.

ஆதியில் ஒவ்வொரு தெய்வத்துக்கும் மலையாளத்திற் போலத் தனித் தனி கோயில்கள் இருந்ததாகத் தெரிகிறது. கட்டிட அமைப்பு முறைகளை மக்கள் விருத்தி செய்தபோது பல சிறு கோயில்கள் அடங்கிய பெருங் கோயில்கள் கட்டும் வழக்கம் ஏற்பட்டது. கற்சிற்பம் விருத்தி யடைந்தபோது ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனி வடிவங்கள் செவ்வையாக அமைக்கப்பட்டன. பல்லாயிர ஆண்டுகளாகக் கட்டட அமைப்பிலும் வடிவங்கள் செதுக்குஞ் சிற்ப வேலையிலும் தலைசிறந்து விளங்கிய தமிழர்கள் என்பது புலனாகிறது.
ஆக சிவன் வழிபாடும் கோயில் கட்டுமானங்களும் ஆரியர்களுக்கு முற்பட்டது.

சிந்து, ஹரப்பா, மொகஸ்சதாரா, மொசபடோமியே போன்றவை தமிழர் நாகரீகத்தின் தொடர்ச்சி என்கிறார்கள் பல்வேறு ஆய்வாளர்கள். ஆனால் ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் இறுதிக் காலத்தில் இங்கே இடம்பெயர்ந்தவர்கள்.

பசுப் புனிதமும் சைவப் பழக்கமும்
போர்க்குச் செல்லுகின்றவர்கள் போர்புரியுமுன் எதிரியின் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து பாதுகாத்தல் மரபு. திருக்குறளில் இரவின் இழிவைப் பேசுமிடத்து, “ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு, இரவின் இழிவந்ததில்” என்றமையால் ஆவின் மதிப்பு அக்காலத்தில் மிகுந்திருந்த தென்று ஊகிக்கப்படும். ஆனால் ஆரிய மரபினர் கெடுநாள் பசுவையும் கொன்று யாகம் செய்தனர் போலும். அது மணிமேகலையில் ஆபுத்திரன் காதையால் இனிது விளங்கும்.

மக்கள் சுரண்டப்படும் வருவாயலிருந்து குதிரை, பசுக்கள் உள்ளிட்ட ஜீவராசிகளை சடங்கு பெயரில் பலியிட்டதாலும் ஆரியர்களுக்கு நிலம், பொன், பொருள் உள்ளிட்ட பல்வே-று தானங்கள் வழங்கப்பட்டதால் வெறுப்புற்ற மக்கள் புதிய மார்க்கத்தை வகுத்தவர்களின் பின்னால் அணிதிரண்டு பின்பற்றத் தொடங்கினர். அந்த சமயப் பிரிவு செல்வாக்கு பெற்றவுடன் அங்கேயும் ஆரியம் உள்ளே புகுந்து ஆதிக்கம் செலுத்தி புலால் உண்ணாமை கொள்ளையை ஏற்று இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இதுபோலத்தான் செல்வாக்கு பெறும் அனைத்திலும் கவனம் செலுத்தி கற்றுத் தேர்ந்து அதனை தங்களுக்கானதாக மாற்றிக் கொள்வதுதான் அவர்களின் மரபு என்பதை கா.சுப்பிரமணியம் பிள்ளை விளக்குகிறார்.

மன்னர் ஆட்சிக் காலத்திலேயும் முகலாயர்கள் ஆட்சியிலும் ஏன் வெள்ளைக்காரர்கள் மற்றும் அதற்கு பிந்தைய ஜனநாயக ஓட்டு முறைமையிலும் அவர்கள் தங்களின் மேலாதிக்கத்தை எதைத் செய்தாவது நிலைநிறுத்திக்கொள்வார்கள் என்பது இன்று வரை நாம் கண்டுணர்கிறோம். இந்தியா மட்டுமின்றி உலகில் பல்வேறு நாடுகளுக்குச் சென்றாலும் அவர்கள் அந்த நாட்டுக்குரியேராகச் மாறிவிடுவார்கள். அவர்களுக்கு தேவை உயர் பொறுப்பு. நல்ல சம்பளம். நிலைத்த இருப்பை தங்க வைத்துக்கொள்வது. அங்கே வேலைக்கு செல்லும்போது குடுமி வைத்துக்கொள்வதோ வேட்டி, பஞ்கசம் அணிந்துகொள்வதோ குறைந்தபட்சம் விபூதி கூட அணிந்துக்கொள்வது கிடையாது.
ஆக அவர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம் என்பது பண், பட்டர் ஜாம் போன்றது… ஆனால் நம்மிடம் மட்டும் அதை ஓதுவார்கள்.