இது குறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள் நல சங்க மாநில அமைப்பாளர் வே.பழனி வேலன் கூறியதாவது:
இந்தியாவிலேயே அதிக கடன் சுமை இருக்கும் மாநிலம் நமது தமிழ்நாடு தான். நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூபாய் 4.5 லட்சம் கடன் தற்போது உள்ளது. அதே நேரம் கடன் வாங்காமல் வளர்ச்சி நிலையை எட்ட இயலாது என்ற நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்குவது தவிர்க்க முடியாது. ஆனால் நம் சக்திக்கும் வரைமுறைக்கும் தகுந்த வாரு கடன் பெறுதல் வேண்டும்.
தமிழ்நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையின் படி ரூபாய் 3,71,000 கோடி ஆகும். நம் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே கடனை பெறலாம். அதற்கு ஏற்ப கடன் வாங்கினால் மட்டுமே நாட்டின் நிதி நிர்வாக மேலாண்மை சிரமமின்றி இருக்கும்.
தமிழக வெற்றிக்கழக அரசு நிறைய வாக்குறுதிகளை தமிழக மக்களுக்காக வழங்கி உள்ளது. மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவை இருப்பதாக தெரிய வருகிறது. தமிழக அரசின் வருவாய் பெருக்க நிறைய வழிகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, கனிம வள நிறுவனம் மூலமாக அரசுக்கு அதிக அளவு வருவாயீட்ட பெரும் வாய்ப்புகள் உள்ளன. கனிமவள நிறுவனத்தில் உள்ள முறைகேடுகளை முற்றிலும் ஒழித்து கணிசமான வருவாய் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
தமிழ்நாட்டின் பொதுத்துறைகளின் மூலம் வருவாயை பெருக்க முடியும். வருவாய்த்துறை, மோட்டார் வாகனத் துறைகளில் உள்ள முறைகேடுகளை கலைந்து வருவாயை அரசுக்கு கொண்டு வருதல் வேண்டும்.
அரசு நிதி நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளை முற்றிலும் நீக்கினாலே நிதி ஆதாரத்தை பெருக்கலாம். தமிழக வெற்றிக்கழக அரசு மத்திய அரசின் நிதி ஒத்துழைப்பை முழுமையாக பெற வேண்டும். பத்திர பதிவுத்துறையில் வழிகாட்டு மதிப்பை சரி செய்து ஒழுங்கு முறையில் கொண்டு வந்து வருவாயே அதிகரித்தல் வேண்டும்.
கூடுதல் வருவாயை பெருமளவு உருவாக்கும் போது புதிய கடன்களை பெற இயலும். மேற்காணும் பணிகளை பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி நடைமுறை செய்யும்பட்சத்தில் அவர்கள் தந்திருக்கும் பெரும்பாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலும் என்று அவர் தெரிவித்தார்.












