தொடரும் காவலர்களின் அதிகார துஷ்பிரயோகமும் அலட்சியப்போக்கும்

0
65

திருப்பூரில் ஆட்டோ டிரைவர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாரை விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் உயரதிகாரிகளை சந்தித்து புகார் தந்திருக்கிறார். சமூக ஊடகத்திற்கு பயந்து குறிப்பிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 8 வருடமாக காதலித்து பல லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காதலனின் திருமணத்தை தடுக்க சென்ற பெண் மற்றும் சமூக ஆர்வலர்களை தாக்கி விசாரணை என்ற பெயரில் காவல்நிலையம் அழைத்துச் சென்ற காவலரின் அடாவடிப்போக்கு சமூக ஊடகத்தில் பரவியதையடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் அந்த அகிகாரி. இப்படியாக பல புகார்கள் வந்துக்கொண்டே இருக்கிறது.
இதற்கு என்னதான் தீர்வு…

தமிழகத்தில் 2000 காவல்நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர். இது குறைவான எண்ணிக்கைதான். அதனால் ஏசி, டிஎஸ்பிக்களும் பணியை பகிர்ந்துக்கொள்ளும்படியான வேலைத்திட்டங்களை வகுக்க வேண்டும். உயரதிகாரிகள் குறைந்த பட்சம் அனைத்து காவல்நிலையத்திற்கும் சென்று வாரத்திற்கு ஒருமுறை மக்கள் குறைதீர்க்கும் முகாமை நடத்த வேண்டும். மீடியாக்களும் அங்கு வரும். பொதுமக்களும் வெளிப்பாடையாக தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்க முடியும்.

புகார்களை காவல்நிலையம் எல்லையை காரணம் காட்டி தவிர்க்கக் கூடாது. காவல்நிலைய அதிகாரிகள் தொலைபேசியில் கலந்துபேசி முடிவெடுத்துவிட்டு புகார்தாரர்களுக்கு வழிகாட்ட வேண்டுமே தவிர அவர்களை அலைக்கழிக்கக் கூடாது.

புகார்கள் உள்ளிட்ட விசாரணைகளை வீடியோ பதிவு எடுக்க வேண்டும். விசாரணையில் அலட்சியம் மற்றும் காலதாமதம் செய்யக்கூடாது. தினமும் பதிவாகும் விசாரணை குறித்து சமூக ஆர்வலர் பத்திரிக்கையாளர், வழக்கறிஞர், மனநல மருத்துவர் அடங்கிய குழு கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் அதிகார துஷ்பிரயோகம் செய்வது தவிர்க்கப்படும். கையூட்டுக்கள் குறையும். பழிக்கு பழி சம்பவங்களும் குறையும். எந்த இன்புலியன்ஸ் செய்யமுடியாத சூழலை உருவாக்கினால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும்.

காவலர்கள் சாலையோர கடைகள் மற்றும் ஹோட்டல் உள்ளிட்ட எந்த கடைகளிலும் சலுகையோ இனாமே கேட்கக்கூடாது. இதனால் வணிகர்கள் தரமற்ற பொருட்களை வழங்கினாலோ அதிக விலைக்கு விற்றாலோ மக்களால் கேட்கக்கூட முடியவில்லை. எல்லாரும் நீதிமன்றங்களை நாட முடியாது. வணிகர்கள் உரிமையோடு கேட்பவர்களை ஒடுக்க காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

கைதிகளை கையாள சிறப்பு நிதியை அரசு ஒதுக்க வேண்டும். காவல்துறையினருக்கு கைதிகளை கையாளும் செலவினங்கள் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. சிறு சிறு குற்றங்களுக்கான கைதிகளை அழைத்துச் செல்வதை தடுக்க ஆன்லைன் மற்றும் மொபைல் நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும். வாய்தாக்கள் எண்ணிக்கை குறையும். நீதிமன்ற வேலைப்பளு குறையும்.
3க்கும் மேல் பெண்கள் மீதான பாலியல் புகார்கள் மற்றும் லாக்அப் டெத் விவகாரத்தில் சிக்கியிருக்கும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

காவலர்களுக்கும் 8 மணி நேரம் தாண்டிய வேலை இல்லாமல் சுழற்சி முறையில் பணியாற்றும் சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் புகார்களை சரியாக பெற்று முதற்கட்ட விசாரணையை தொலைபேசியில் முடித்தாலே பாதி பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். சாதிய அரசியல் மற்றும் லோக்கல் பலம் அறிந்து செயல்படுவதாலே குற்றங்கள் அதிகரிக்க காரணம். கையூட்டும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதனை ஒழிக்க வேண்டுமாயின் விசாரணைக்கென்று தனி அதிகாரிகள், புகார்தாரர் குற்றவாளியை கையாள தனி அதிகாரிகள் என்று பிரிக்க வேண்டும்.

காவலர்களுக்கிடையே வேலை செய்வதில் போட்டா போட்டி நடைபெறுவதும் வேலை செய்யும் மனப்பாண்மை இல்லாமல் இருப்பதும் பொதுவாக அரசு அலுவலகத்தில் உள்ள மிகப்பெரிய பொதுப் போக்காக மாறிவிட்டது.

தொடர்ச்சியான சுற்றறிக்கை, கள ஆய்வு மேற்கொண்டு அவர்களை மனதளவில் தயார்படுத்த வேண்டும். திட்டமிட்ட வேலை நேரம், போதிய காரணங்களுக்கு விடுப்பு வழங்குவது, உயரதிகாரிகள் கண்ணியமாக நடத்துவது மிகவும் முக்கியம்.

புகார்கள், விசாரணைகளை மேற்பார்வை செய்ய சமூக ஆர்வலர் பத்திரிக்கையாளர், வழக்கறிஞர், மனநல மருத்துவர் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்.
காவலர்களின் மீதான புகார்களையும் உளவுத்துறை அதிகாரிகள் திரட்டும் பணியை செய்ய பணிக்க வேண்டும். கண்காணிப்புகளில் கூட்டு முயற்சி மட்டுமே இப்போது அதிமுக்கியமான பணியாக இருக்க வேண்டும்.

ந,ரமேஷ்குமார்
பத்திரிக்கையாளர் மற்றும் பதிப்பாளர்
தொடர்புக்கு 9791103949